இனங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ,கலாசாரப் பண்புகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் தொடர்பாடல் பிரச்சினைகளைக் குறைத்து பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் படையணி இளைஞர் கடெட்களுக்கு நடத்தப்பட்ட மூன்று நாள் வடக்கு-தெற்கு சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
அதன் முதல் நாளன்று திவுலப்பிட்டி பயிற்சி நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதுடன், தெற்கின் அறுசுவை உணவு மேசை வடக்கிலுள்ள இளைஞர்களின் சுவாரசியமான அம்சமாக இருந்தது. இரண்டாம் நாளன்று ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார வரலாற்று அருங்காட்சியகம், தாமரை கோபுரம், விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிறப்பு இடங்களையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததுடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஅவர்களின் தலைமையின் கீழ் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பும் இளைஞர் கடெட்களுக்கு கிடைத்தது . மூன்றாம் நாள் காலையில் , அத்தனகல்ல ரஜமஹா விகாரை, கம்பஹா ஹெனரத்கொட தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற இளைஞர் கடெட்கள் அன்று மாலை திவுலப்பிட்டிய பயிற்சி நிலையத்தில் கிரிக்கெட் மற்றும் வொலிபோல் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அன்றைய தினம் இரவில் தீப்பாசறை மற்றும் கலாச்சார நிகழ்ச்சியும் திவுலப்பிட்டி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக யூஎஸ்பி பீஎஸ்சி ஐஜீ, மேலதிக பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) சட்டத்தரணி நிஷாந்த புஷ்பகுமார, மேலதிக பணிப்பாளர் (பயிற்சி மற்றும் அபிவிருத்தி) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், மேல் மாகாண பணிப்பாளர் கர்னல் எல். பி.மென்டிஸ் மற்றும் வட மாகாண பணிப்பாளர் கர்னல் அமித் லியனகே ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றதுடன் அதில் நிலைய பொறுப்பதிகாரிகள், நிலைய ஆளணியினர், தலைமை அலுவலக ஆளணியினர் மற்றும் இளைஞர் கடெட்கள் பங்குபற்றினர்.